ஸ்தல ஸ்தாபனச் சட்டம். குடி அரசு - தலையங்கம் - 07.08.1932 

Rate this item
(0 votes)

இப்பொழுதுள்ள “ஸ்தல ஸ்தாபனச் சட்டப்படி நகரசபைத் தலைவர்களோ, லோக்கல் போர்டுகளின் தலைவர்களோ ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் அவர்கள் மீது உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றவும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் பெரும்பான்மையோரால் நிறைவேற்றப்பட்டவுடன் தலைவர்கள் தங்கள் பதவியை இழந்து விடவும் இடமிருக்கிறது. 

“ஸ்தல ஸ்தாபனச்சட்ட”த்தில் இத்தகைய பிரிவு ஏற்படுத்தியிருப்பதை யாரும் ஆட்சேபிக்க முடியாது. இது ஸ்தல ஸ்தாபனங்களின் நிர்வாகம் ஊழலாகப் போய் விடாமல் திறமையாக நடைபெற வேண்டும் என்னும் நன்னோக்கத்துடன் அமைக்கப்பட்டதேயாகும். இப்பிரிவு இல்லாவிட்டால் தலைவர்கள் சிறிதும் பயமில்லாமல் தங்கள் அதிகாரங்களைச் சுய நலத்தின் பொருட்டு துஷ்பிரயோகம் செய்ய இடமேற்படும் என்பதில் ஐயமில்லை இப்பிரிவு இருந்தால் ஸ்தல ஸ்தாபன”த் தலைவர்கள் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டாவது நேர்மையான வழியில் நடந்து கொள்ள வேண்டும் என்று ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும். 

ஆனால் இச்சட்டம் அமலுக்கு வந்த சுமார் இரண்டு வருஷங்களாக, பல நகர சபைகளிலும், லோக்கல் போர்டுகளிலும் உள்ள தலைவர்களின் பேரில் நம்பிக்கை இல்லாத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. சில "ஸ்தல ஸ்தாபனங்களில்” மற்ற வேலைகளைக் கவனிப்பதற்கு நேர மில்லாமல் சதா நம்பிக்கை இல்லாத் தீர்மானங்கள் கொண்டு வருவதும், இருக்கும் தலைவரை விலக்குவதும், வேறு தலைவரைத் தேர்ந்தெடுப்பதும் பிறகு அத்தலைவர் மேல் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றுவதும் ஆகிய வேலையே நடைபெற்றுக் கொண்டு வந்திருக்கின்றது. நகர சபைக் காரியங்களையும் வோக்கல் போர்டுகளின் வேலைகளையும், ஒழுங்காகவும், திறமையாகவும் நிர்வாகம் புரிந்து வந்த தலைவர்களும் இந்த நம்பிக்கை யில்லாத் தீர்மானத்திற்கு இரையாகி இருக்கிறார்கள். ஆகையால், இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மான அதிகாரமானது உறுப்பினர்களுக்கும் தலைவர் களுக்கும் உள்ள தனிப்பட்ட விரோதங் களினாலும், சம்பந்தத்தினாலும் தலைவரின் நிர்வாகத் திறமையையோ, ஊழலையோ கவனியாது பதவியை விட்டு நீக்கவும் பதவியில் வைத்திருக்கவும் இடங்கொடுக்கிறதென்பதை உணரலாம். இந்தக் காரணத்தை உத்தேசித்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் சம்பந்தமாகத் திருத்தம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணமும். ஸ்தல ஸ்தாபனங்களின் நிர்வாகம் மனழல்களாகப் போகாமல் இருக்க பாதுகாப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்னும் எண்ணமும் இச்சட்டம் ஏற்பட்ட நாள் முதலே பலர் மனத்தில் இருந்து வந்தது. இதற்காகச் சில தனிப்பட்ட சட்டசபை உறுப்பினர்கள் முயற்சி செய்தும் ஒன்றும் நிறைவேறவில்லை. 

ஆனால் இம்மாதம் நடைபெறும் சென்னை சட்டசபைக் கூட்டத்தில் முதன் மந்திரியவர்களால் தயாரிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைப் பற்றிய திருத்தமொன்று அரசாங்கத்தாரால் கொண்டு வரப்படுமென்று அறிகிறோம். அத்திருத்தத்தில் கீழ்க்கண்ட விஷயங்கள் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது. 

"தலைவர் மீதோ, உபதலைவர் மீதோ நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன் தீர்மானத்தைக் கொண்டு வருபவர் பத்து நாட்களுக்கு முன் அறிக்கை செய்ய வேண்டும்.” 

"அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் நிறைவேற்றப் பட்டால் தலைவரை அப்புறப்படுத்த அரசாங்கத்தாருக்கு அதிகாரம் உண்டு." 

"ஒரே கூட்டத்தில் தலைவர் பேரிலும், உபதலைவர் பேரிலும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கூடாது." 

“ஒருவரால் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் சபை உறுப்பினர்களால் நிராகரித்துத் தள்ளப்படுமானால் அவர் மீண்டும் ஆறு மாதத்திற்குள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரக் கூடாது." 

“நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொஞ்சம் அதிகப்படியான அங்கத்தினர்களின் ஆதரவை மாத்திரம் பெற்று மூன்றில் இரண்டு பங்கு அங்கத்தினரின் ஆதரவைப் பெறாதிருந்து ஆறுமாதங்களுக்குப் பின்னும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு இதே போன்று நிறைவேறுமானால் தலைவரை நீக்கும் அதிகாரம் அரசாங்கத்தார்க்கு உண்டு." 

இத்திருத்தம் நிறைவேறுமானால் ஸ்தல ஸ்தாபனங்களின் நிலைமை தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் கொஞ்சம் மாறுதலடையும் என்று நிச்சயமாக நம்பலாம். தற்பொழுதுள்ள சட்டப்படி தலைவர் மீதும் உபதலைவர் மீதும் ஒரே சமயத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர இடமிருப்பதனாலும். அத்தீர்மானம் நிறைவேறிய உடன் தலைவர்கள் தமது பதவியை விட்டு நீங்க வேண்டியிருப்பதனாலும் உண்டாகும் சங்கடங்கள் பல. இச்சங்கடத்தைத் தற்போது கொண்டு வர இருக்கும் திருத்தம் நிவர்த்திக்கிறது என்ற அளவில் திருப்தியடைய வேண்டியிருக்கிறது. 

ஆனால் தற்போதுள்ள “ஸ்தல ஸ்தாபனச் சட்டம்” நம்பிக்கையில்லாத் தீர்மானம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. அவைகளின் ஆட்சியோ சமமாக நடைபெறுவதற்குத் தூண்டுகோலாக இருப்பதென்பதே நமது அபிப்பிராயம். இது விஷயமாகத் தற்போதைய சட்டம் அமலுக்கு வந்த காலத்திலேயே குடி அரசு தனது அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறது. இப்பொழுதும் அவ்வபிப் பிராயத்தையே வலியுறுத்திக் காட்ட விரும்புகிறோம். 

நமது நாட்டில் அரசியல்வாதிகளாக விளங்குகின்றவர்கள் அனை வரும் அரசாங்கத்தில் புதிய அரசியல் சீர்திருத்தத்தின் பலனாக ஏற்பட்டி ருப்பதும், ஏற்படவிருப்பதும் ஆகிய மாதம் 1000, 2000, 3000, 4000, 5000 கணக்காக சம்பளமுள்ள அதிகாரப் பதவிகளைப் பெறுவதிலேயே நோக்க முடையவர்கள் என்பதை நாம் புதிதாக எடுத்துக் காட்ட வேண்டியதில்லை. ஆகவே இவ்வரசியல்வாதிகள் ஜனங்களின் ஓட்டுக்களைப் பெற்றுச் சட்டசபைகளுக்குச் செல்ல வேண்டுமானால் கிராமத்து ஜனங்களிடம் தங்கள் செல்வாக்கை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கின்றது. இதற்கு அடிப்படையாக இவர்கள் “ஸ்தல ஸ்தாபனங்” களையே வைத்திருக் கிறார்கள். 

"ஸ்தல ஸ்தாபனங்" களில் உத்தியோக நியமனங்களும் "கண்ராக்ட்" விஷயமும் அவற்றின் தலைவர்களுக்கு இருப்பதனால் இவைகளின் தலைமை ஸ்தானத்தைக் கைப்பற்றி மேற்கண்ட அதிகாரங்களை உப யோகப்படுத்திச் சட்ட சபைத் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்னும் கருத்தைக் கொண்டே அரசியல்வாதிகளெவ்வாம் ஸ்தல ஸ்தாபனங்களில் முதன்மையாகக் கவனம் செலுத்தி வருகின்றார்கள் என்று கூறலாம். 

இரண்டாவது, ஆயிரக்கணக்கான சம்பள உத்தியோகங்களுக்கு ஆசைப்படாதவர்கள் தங்கள் உற்றார் உறவினர்களுக்கு உத்தியோகம் தேடிக் கொடுக்கவும், கண்ட்ராக்டின் மூலம் பணம் சம்பாதிக்கவுமே “ஸ்தல ஸ்தாபனங்”களின் ஸ்தானங்களைக் கைப்பற்ற விரும்புகின்றார்கள். 

இவ்விரண்டு காரணத்தைக் கொண்டுதான் இன்று ஸ்தல ஸ்தாபனத் தேர்தலில் போட்டி, பலமாக இருக்கின்றது. கேவலம் கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர் பதவி முதல் ஜில்லா போர்டு உறுப்பினர் பதவி வரையில் உள்ள ஒவ்வொரு தேர்தலுக்கும். ஆயிரம், பதினாயிரம், லட்சம் என்ற கணக்கில் ரூபாய்கள் செலவழிக்கப்படுகின்றன. *ஆதாயமில்லாத செட்டியார் ஆற்றோடு போவாரா" என்று கூறும் பழமொழி இந்தஸ்தல ஸ்தாபனங்களில் பணஞ் செலவழிக்கின்றவர்கள் விஷயத்தில் பொருந்தாமல் போகாது. 

மற்றபடி ஸ்தல ஸ்தாபனங்களின் மூலம் பொது ஜனங்களுக்கு நன்மைகள் செய்யவேண்டும் என்னும் உண்மை நோக்கமுடையவர்களுக்கு இக்காலத்தில் இடங் கிடைப்பது அரிது. இப்பொழுது தேர்தலில் செலவு செய்யும் பணத்தைப் பிறகு சம்பாதித்துக் கொள்ளலாம்" என்ற தைரியம் உள்ளவர்கள் தான் துணிந்து கணக்கில்லாமல் பணத்தைச் செலவழிக்க முன் வருவார்கள். நாணயமாக நடந்து கொள்ளும் நோக்கம் உள்ளவர்கள் கணக்கற்ற பொருளை வீணாகத் தேர்தலில் செலவு செய்யச் சம்மதிக்க மாட்டார்கள். ஆகவே நாணயமுள்ளவர்கள் ஸ்தல ஸ்தாபனங்களில் ஸ்தானம் பெறுவதே முடியாததாகும். 

ஒரு சமயம் நாணயமுள்ளவர்களும், திறமையுள்ளவர்களும், பொதுஜன ஊழியத்தில் உண்மையான விருப்பமுள்ளவர்களும் ஸ்தல ஸ்தாபனங்களில் உறுப்பினர் பதவி பெற்றுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக் கப்பட்டாலும் அவர்கள் தங்கள் பதவியின் கௌரவத்திற்கு ஆசைப்பட்டால், நாணயத்தோடும் திறமையோடும் தங்கள் கடமையைச் செய்ய முடியாத நிலையிலேயே தான் இருக்க முடியும். ஏனென்றால். ஸ்தல ஸ்தாபனங்" களின் பொருளிலிருந்தே, தங்கள் தேர்தல் செலவை ஈடுசெய்து கொள்ளலாம் என்ற நோக்கமுடன் வந்திருக்கும் உறுப்பினர்களுக்கும், தங்கள் செல்வாக்கை உபயோகப்படுத்திப்பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கமுடன் வந்திருக்கும் உறுப்பினர்களுக்கும் சலுகை காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டே தீரும். இந்நிர்ப்பந்தத்திற்குக் கட்டுப்படாத தலைவர், நம்பிக்கையில்லாத் தீர்மானத் தின் மூலம் தமது பதவியை இழக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு விடும். ஆதலால் தலைவர் பதவிக்கு ஆசைப்படுகின்றவர்கள், சபையின் பெரும் பாலான உறுப்பினர்களை எந்த வகையினாலும் திருப்திப்படுத்தி வைத்திருக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். 

இதனால் எவ்வளவு யோக்கியமும், திறமையும் உள்ள தலைவரா யிருந்தாலும் அவர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டுமென்று ஆசைப்படுவாரேயானால் ஆயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவழித்து அங்கத்தினராக வந்திருப்பவர்களில் மெஜாரிட்டி"யாரை ஒழுங்கீனமான வழியில் திருப்தி செய்து வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின் றார் என்பதை உணரலாம். இந்த நிலையை உண்டாக்கி இருப்பது தற்போ துள்ள சட்டமும், நம்பிக்கையில்லாத் தீர்மானமுமேயாகும் என்பதையும் அறியவாம் ஆனால், ஸ்தல ஸ்தாபனச் சட்டத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர இடமில்லாதிருக்குமானால் இத்தகைய ஊழல்களுக்கு இட முண்டாகாது என்று கூறலாமா? என்றால் இப்படியும் கூறமுடியாது. இப் பொழுதாவது உறுப்பினர்களெல்லாம் உண்மையான பொது ஜன ஊழியர் களாயிருந்தால், யோக்கியமுள்ள தலைவரை வைத்திருக்கவும், போக்கியப் பொறுப்பில்லாத தலைவர்களைப் பதவியை விட்டு நக்கவும் அதிகார மிருக்கின்றது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் இல்லாவிட்டால் ஒழுங்கீனமாக நடந்து அதிகாரத்தைத் துஷ்பிரயோகஞ் செய்யும் தலைவர்கள் எந்த வகைக்கும் பயமில்லாமல், தற்போதுள்ள சட்டப்படி தலைவர் பதவியேற்ற மூன்று வருஷம் வரையிலும் தமது விருப்பம் போல் தாராளமாக நடக்க இடங் கொடுக்குமாதலால் “ஸ்தல ஸ்தாபனங்”களின் நிர்வாகமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இன்னும் படுமோசமாகப் போய்விடும் என்பதில் ஐய மில்லை. ஆகையால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் அவசியம் இருந்துதான் தீர வேண்டுமென்று நாம் வற்புறுத்துகிறோம். 

இப்பொழுது “ஸ்தல ஸ்தாபனங்” களில் உள்ள ஊழல்கள் ஒழிந்து அவைகளின் ஆட்சி திறமையாகவும், பொதுஜனங்களுக்குப் பயன்படும் வழியிலும் நடைபெற வேண்டுமானால் அவைகளுக்கு ஒவ்வொன்றும் தனித்தனியே ஒரு நிர்வாக அதிகாரியை நியமனம் பண்ணி, அவற்றின் காரியங்களை நடத்தும் உரிமையை அந்த உத்தியோகஸ்தரிடம் விட்டு விட்டால் போதுமானதாகும் என்பதே நமது நோக்கமாகும். அதாவது. இப்பொழுது சென்னை நகர சபைக்குக் “கமிஷனர்" என்று ஒரு நிர்வாக அதிகாரி இருப்பது போல ஒவ்வொரு "முனிசிபாலிட்டி”களுக்கும். “தாலூகா போர்டு"களுக்கும், "ஜில்லா போர்டு"களுக்கும், அதனதன் வரவு செலவுகளுக்கும், நிர்வாகத்துக்கும் தகுந்த யோக்கியதையில் ஒவ்வொரு நிர்வாக அதிகாரியை நியமிக்கவேண்டுமென்பதே நமது அபிப்பிராயம். இப்பொழுது சென்னை நகரசபையில் அதன்நிர்வாக காரியங்களை நடத்த "கமிஷனர்” என்னும் நிர்வாக அதிகாரி இருப்பதனால் தான் அங்கத்தினர்கள் ஒருவர்க்கொருவர் எவ்வளவு தான் அரசியல் விஷயமாகவும், வகுப்பு சம்மந்தமாகவும் விரோதம் பாராட்டிக் கொண்டாலும் அதன் நிர்வாகம் திறமையாக நடந்து வருகின்றது என்பதில் ஐயமில்லை. இவ்வாறில்லா விட்டால் பெரிய நகரமாகிய சென்னையும் மற்ற - அங்கத்தினர்களும், தலைவர்களும், சண்டைப் போட்டுக் கொண்டிருக்கின்ற நகர சபைக்கும் உட்பட நகரங்களும் வோக்கல் போர்டுகளுக்கு உட்பட்ட ஊர்களும் கஷ்டப்படுகின்ற மாதிரி கஷ்டப்பட வேண்டியதுதான் என்பதை யாரும் மறுக்க முடியாது.. 

ஆகையால் இதுபோலவே "ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் நிருவாக அதிகாரிகள் என்பவர்களை ஏற்படுத்திவிட்டால் அவைகளில் உத்தியோக நியமனங்கள் சம்பந்தமாகவும் கண்ட்ராக்ட் சம்மந்தமாகவும் தற்பொழுது நடைபெறும் ஊழல்கள் நடைபெற இடமே ஏற்படாது. ஸ்தல ஸ்தாபன உத்தி யோகஸ்தர்களும் அங்கத்தினர்களின் தயவுக்கும், சலுகைக்கும் கட்டுப்பட்டு ஒழுங்கீனமான வழியில் நடந்து கொள்ள வேண்டிய நிலைமை மாறி, யோக்கி யர்களாகவும் தங்கள் கடமையைத் திறமையோடு செய்யக் கூடியவர்களா கவும் நடந்து கொள்ள முடியும். இதனால் நிர்வாகம் மிகவும் உயர்வுடைய தாகவும் இருக்கும். 

அடுத்தபடியாக “ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்களில் அங்கத்தவர்கள் ஏராளமாகச் செலவழிப்பதும் ஒழியும். கூடிய வரையிலும் உண்மையான பொது ஜன ஊழியர்களும் யோக்கியர்களும், கல்வியறிவுடையவர்களும் ஸ்தல ஸ்தாபனங்களில் பதவி பெறுவார்கள். 

இதனால் ஸ்தல ஸ்தாபனங்”களில் மோகமுள்ளவர்கள் இவ்வாறு செய்வதனால் ஜனநாயகத் தன்மை போய்விடுகிறது” என்று நொண்டிவாதம் கூறுவார்கள். இதனால் ஜனநாயகத்துவம் போய்விடவில்லையென்பதே நமது அபிப்பிராயம். நிர்வாக அதிகாரி” அந்த ஸ்தாபனத்திற்கு நியமிக்கப்பட்ட ஊழியரே தவிர யதேச்சதிகாரியல்லர். தலைவரும், அங்கத்தவர்களும் யோசித்துச் செய்யும் தீர்மானங்களின் படி தான் நிர்வாக அதிகாரி காரியங் களை நடத்திச் செல்லுவாரேயொழிய வேறு அவராக ஒன்றும் செய்வதற்கு அதிகாரமில்லை. அன்றியும் இவ்வதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனப்பிரதிநிதிகளின் தலைவர்களான மந்திரிகளுக்கு ஏற்படுகிறது. இதனால் ஜனநாயகத்துவத்திற்கு விரோதமான சங்கதியும் ஒன்றுமில்லை என்று இதனால் அறியலாம். இம்மாதிரி நிர்வாக அதிகாரியை நியமிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டால்தான் தற்போதைய ஸ்தல ஸ்தாபனச்சட்டம் ஒழுங்கு பெற நடைபெறும் என்பதை எடுத்துக்காட்டவே இவ்வளவு தூரம் கூற முன் வந்தோம். இந்த முறையில் சட்டத்தைத் திருத்த முயற்சி செய்வதே உண்மை யான ஜனாபிமானிகளின் கடமையாகும். இல்லாத வரையில் சுயமரியாதையும், நாணயமும், திறமையும் உள்ளவர்கள் யாரும் ஸ்தல ஸ்தாபனங்களில் அங்கம் வகிக்கவும், தலைமை வகிக்கவும் இவைகளின் மூலம் தேச மக்களுக்கு நன்மை செய்யவும் இடமில்லை என்றே கூறுகின்றோம். இதற்கு உதாரணம் வேண்டுமானால் தற்பொழுது “ஸ்தல ஸ்தாபனங்”களில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஸ்தாபனங்களே நாணயமான தலைவரைப் பெற்று ஒழுங் காக நிர்வாகம் நடத்திக் கொண்டு செல்லுகின்றனவே தவிர நாணயமும், நிர்வாகத் திறமையும் உடைய தலைவர்கள் பவர் நம்பிக்கையில்லாத் தீர்மா னங்களால் விரட்டியடிக்கப்பட்டதையும் ஒழுங்கீனமும் சக்தியில்லாமையும் உடையவர்கள் பலர் தலைவர்களாக இருப்பதையும் நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டுகிறோம். 

ஆனால் இப்பொழுது “நிர்வாக அதிகாரி ஏற்படுத்த வேண்டும்” என்னும் நமது கொள்கைக்கு எதிர்ப்பு இருந்தாலும் இவைகளின் ஊழல்கள் இன்னும் அதிகமாக அதிகமாகக் கடைசியில் உண்மையான ஜன சமூக ஊழியர்கள் இம்முடிவுக்கே வந்து தீருவார்களென்பதில் நமக்கு நம்பிக்கையுண்டு. 

குடி அரசு - தலையங்கம் - 07.08.1932

 
Read 60 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.